ENG vs IND, 5th Test: ஏமாற்றிய கில், புஜாரா; ஆண்டர்சன் கலக்கல்!
கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் 4 டெஸ்டுகளில் இரண்டில் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மற்றொரு போட்டி 'டிரா'வில் முடிந்ததால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.
இந்திய அணிக்கு இந்தத் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமை தாங்குகிறார். இதனையடுத்து இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச தீர்மானித்தார். இதையடுத்து இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை. ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜாவும், ஷர்துல் தாக்குரும் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் - சட்டேஷ்வர் புஜாரா இணை தொடக்கம் தந்தது. இதில் சுப்மன் கில் 17 ரன்களிலு, சட்டேஷ்வர் புஜாரா 13 ரன்களும் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி - விராட் கோலி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதனால் 20.1 ஓவர்களுக்கு இந்திய அணி 53 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. இதனால் முதல் நாள் உணவு இடைவேளை முன்கூட்டியே எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி தரப்பில் ஹனுமா விஹாரி 14 ரன்களுடனும், விராட் கோலி ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.