சேட்டை மன்னன் ஜார்வோவிற்கு வாழ்நாள் தடை!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் கடந்த 25ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ செய்த செயல் மீண்டும் இணையத்தில் வைரலாகியது.
இந்த இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய அணியின் ஜெர்சியை அணிந்த அவர் பீல்டிங் செய்வதுபோல உள்ளே வந்தார். அதனை கண்ட அம்பயர்கள் மைதான ஊழியர்கள் உதவியுடன் அவரை குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
இந்நிலையில் தற்போது இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விக்கெட் விழுந்ததும் இந்திய அணியின் 4ஆவது வீரராக பேட்டிங் செய்யவே அவர் தயாராகி களத்துக்கு வந்து விட்டார். களத்திற்கு வந்தது பேட்ஸ்மேன் இல்லை, ஜார்வோ என்று தெரிந்ததும் மீண்டும் அம்பயர்கள் மைதான பாதுகாப்பு ஊழியர்களை அழைக்க, அவர்கள் வந்து ஜார்வோவை எச்சரித்து வெளியேற்றினர்.
இந்நிலையில் அத்துமீறி மைதானத்தில் நுழையும் ஜார்வோ, ஹெடிங்க்லே மைதானத்தில் நுழைய வாழ்நாள் தடை விதிப்பதாக யார்க்ஷையர் கவுண்டி கிளப் அறிவித்துள்ளது.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இதுகுறித்து யார்க்ஷையர் செய்திதொடர்பாளர் கூறுகையில், “ இனி ஹெடிங்லே மைதானத்தில் அத்துமீறி நுழையும் அனைவருக்கு வாழ்நாள் தடைவிதிக்கப்படும் என்பதை என்னால் உறுதியாக குறிப்பிட முடியும். தற்போது ஜார்வோவிற்கும் ஹெட்டிங்லே மைதானத்தில் நுழைய வாழ்நாள் தடை விதித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.