பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தானை பந்தாடியது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை தொடரி எட்டாவது சீசன் நேற்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றிருக்கும் இத்தொடரில் தற்போது, தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதேசமயம் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிப்பெற்றுள்ள 8 அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. அதன்படி இன்று பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஷான் மசூத் - ஹைதர் அலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் ஹைதர் அலி 18 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷான் மசூத்தும் 39 ரன்கைல் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சரிவர செயலபடாமலும், இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் மிடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை மட்டுமே சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பிலீப் சால்ட் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்தார். பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் ஹேல்ஸ் 9 ரன்களோடு ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அவருக்கு துணையாக லியாம் லிவிங்ஸ்டோனும் சில பவுண்டரிகளை பறக்கவிட்டார். பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டோக்ஸ் 36 ரன்களிலும், லிவிங்ஸ்டோன் 16 ரன்களோடும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹாரி ப்ரூக் - சாம் கரண் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் 14.4 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இங்கிலாந்து தரப்பில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹாரி ப்ரூக் 24 பந்துகளில் 45 ரன்களையும், சாம் கரண் 14 பந்துகளில் 33 ரன்களையும் சேர்த்தனர்.