Birmingham Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஷுப்மன் கில்லின் அபாரமான சதத்தின் காரணமாக 608 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. 

Advertisement

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 269 ரன்களையும், ரவீந்திர ஜடேஜ் 89 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஷோயப் பசீர் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Advertisement

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேமி ஸ்மித் 21 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 184 ரன்களையும், ஹாரி புரூக் 17 பவுண்டரிகளுடன் 158 ரன்களையும் சேர்த்தை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

இதில் யஷஸ்வி ஜெஸ்வால் 28 ரன்னிலும், கருண் நாயர் 26 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அரைசதம் கடந்த கேஎல் ராகுலும் 55 ரன்களில் ஆட்டமிழந்தர். அதன்பின் இணைந்த கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரிஷப் பந்த் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 65 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில் சதமடித்து அசத்தினார். அவருக்கு துணையாக ரவீந்திர ஜடேஜாவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

அதன்பின் 13 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 161 ரன்களைச் சேர்த்த கையோடு ஷுப்மன் கில்லும், ஒரு ரன்னில் நிதீஷ் ரெட்டியும் ஆட்டமிழக்க, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 427 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 69 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ் மற்றும் ஷோயப் பஷிர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் எனும் இமாலய இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது. 

Also Read: LIVE Cricket Score

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய பென் டக்கெட்டும் 25 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். மேற்கொண்டு ஜோ ரூட்டும் 6 ரன்களில் நடையைக் கட்ட இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஒல்லி போப் 24 ரன்களுடனும், ஹாரி புரூக் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து இங்கிலாந்து அணி கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ள நிலையில் 536 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News