டி20 உலகக்கோப்பை: பூதாகரமாகும் டி காக் சர்ச்சை!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. சொந்தக் காரணங்களுக்காக இந்த ஆட்டத்திலிருந்து பிரபல வீரர் டி காக் விலகியுள்ளதாக தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா தெரிவித்தார்.
இது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு அனைத்து தெ.ஆ. கிரிக்கெட் வீரர்களும் ஒரேவிதமாக ஆதரவு தெரிவிக்க வேண்டும் என தெ.ஆ. கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி காக் விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்தாண்டு அமெரிக்காவில் காவலர்களால் தாக்கப்பட்டு கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்தார். இதையடுத்து ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்ததைக் கண்டித்தும் கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற வாசகத்தை முன்வைத்தும் அமெரிக்கா முழுவதும் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிறவெறி எதிா்ப்பு ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
நாம் அனைவருமே மனிதர்கள். கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற இயக்கம் என்பது வெள்ளையர்களைக் கருப்பர்கள் முந்திச் செல்வதற்காகத் தொடங்கப்பட்டது அல்ல. அதன் நோக்கமே சமத்துவத்தை நிலைநாட்டுவதுதான் என்று இனப்பாகுபாடு குறித்து விரிவாகப் பேட்டியளித்து கிரிக்கெட் வட்டாரத்தில் பாராட்டுகளைப் பெற்றார் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங்.
இதையடுத்து முக்கியமான கிரிக்கெட் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் சில நொடிகள் மண்டியிட்டு கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற இயக்கத்துக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள். சில ஆட்டங்களில் இரு அணி கிரிக்கெட் வீரர்களும் பயிற்சியாளர்களும் மட்டுமல்லாமல் நடுவர்களும் ஒரு சில நொடிகள் மண்டியிட்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.
வீரர்கள் ஆடுகளத்திலும் பயிற்சியாளர்களும் இதர ஊழியர்களும் எல்லைக் கோட்டுக்கு அருகேயும் தங்கள் செயல்களை வெளிப்படுத்தினார்கள். கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்தும் கிரிக்கெட் ஆட்டங்களில் வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் இந்திய அணி உள்பட பல அணிகள் ஆடுகளத்தில் சில நொடிகள் மண்டியிட்டும் வேறு விதங்களிலும் கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி துபாயில் இன்று நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஒரேவிதமாக அனைத்து வீரர்களும் சில நொடிகள் மண்டியிட்டு கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியிருந்தது.
அனைத்து ஆட்டங்களிலும் வீரர்கள் ஒற்றுமையுடன் இதைச் செய்யவேண்டும் எனக் கூறியிருந்தது. அதேபோல ஆட்டம் தொடங்கும் முன்பு இரு அணி வீரர்கள் சில நொடிகள் மண்டியிட்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள். இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் இதுபோல மண்டியிட்டு ஆதரவு தெரிவித்தது கிடையாது.
வெஸ்ட் இண்டீஸில் தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது மூன்று விதமாக அந்த அணி வீரர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். அப்போது டி காக் தன்னுடைய ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக எந்தச் செயலையும் செய்யவில்லை.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆட்டத்தில் எதிர்பாராதவிதமாக டி காக் விலகியுள்ளார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கையால் அதிருப்தி அடைந்து, கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்க முடியாத காரணத்தால் இந்த ஆட்டத்திலிருந்து அவர் விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டி காக்கை பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள். எனினும் இதுகுறித்த தன் நிலைப்பாட்டை டி காக் விரைவில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.