குயின்டன் டி காக் அபார சதம்; பாகிஸ்தான் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அசத்தல் வெற்றி!

Updated: Thu, Nov 06 2025 23:27 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாஅள் போட்டி இன்று ஃபைசலாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. 

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஸமான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய பாபர் ஆசாம் 11 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த சைம் அயுப் - சல்மான் ஆகா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களையும் பதிவு செய்து அசத்தினர். 

அதன்பின் 53 ரன்களில் சைம் அயுப்பும், 69 ரன்களில் சல்மான் ஆகாவும் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் முகமது நவாஸ் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசி 59 ரன்களைச் சேர்த்தார். அவருடன் இணைந்த ஃபஹீம் அஷ்ரஃபும் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

இதனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நந்த்ரே பர்கர் 4 விக்கெட்டுகளையும், ந்காபயோம்ஸி பீட்டர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் - லுவான் டிரே பிரிட்டோரியர்ஸ் மற்றும் குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் பிரிட்டோரியஸ் 46 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் டி காக்கிற்குடன் ஜோடி சேர்ந்த டோனி டி ஸோர்ஸி அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். 

இப்போட்டியில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய குயின்டன் டி காக் தனது 21ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் விளையாடி வந்த டோனி டி ஸோர்ஸி 9 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என 76 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குயின்டன் டி காக் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என 123 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

Also Read: LIVE Cricket Score

அவருடன் இணைந்து விளையாடிய மேத்யூ ப்ரீட்ஸ்கி 17 ரன்களையும் சேர்த்திருந்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 40.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்ததுடன், ஒருநாள் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதம் விளாசிய டி காக் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை