ஒருநாள் போட்டிக்கு வெங்கடேஷ் ஐயர் சரிபட்டு வரமாட்டார் - கவுதம் கம்பீர்!

Updated: Tue, Jan 25 2022 17:36 IST
Image Source: Google

ஐபிஎல் 2021 சீசன் 2ஆவது பகுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அந்த அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர். யார் பந்து வீசினாலும் கவலைப்படாமல் துவம்சம் செய்தார். அத்துடன் மிதவேக பந்து வீச்சாளராகவும் தன்னை நிரூபித்தார். இதனால் இந்திய அணியில் காயத்தால் பந்து வீச முடியாமல் இருக்கும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு மாற்று வீரராக கருதப்பட்டார்.

ஐபிஎல் தொடரில் சிறப்பான விளையாடிதன் மூலமாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனால், முதல் இரண்டு போட்டிகளில் 24 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் 3ஆவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். 2ஆவது போட்டியில் பந்து வீச வாய்ப்பு கிடைத்த போதிலும், விக்கெட் வீழ்த்தவில்லை.

இந்த நிலையில் வெங்கடேஷ் ஐயர் ஒருநாள் போட்டிக்கு சரிவரமாட்டார் என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “வெங்கடேஷ் ஐயரை டி20 கிரிக்கெட் போட்டிக்கு மட்டுமே கருத வேண்டும் என உணர்கிறேன். ஏனென்றால், ஒருநாள் போட்டிக்கு ஏற்ற வகையில் இன்னும் அவர் முதிர்ச்சி அடையவில்லை. 7 முதல் 8 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதை வைத்து அவருக்கு சர்வதேச போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதை பார்த்தீர்கள் என்றால், அவரை டி20 கிரிக்கெட்டில்தான் விளையாட வைக்க வேண்டும். ஒருநாள் போட்டி முற்றிலும் மாறுபட்ட போட்டி. ஐயர் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கினார். தற்போது அவர் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்கப்பட்டார்.

அவரை ஒருநாள் கிரிக்கெட் போ்டடியில் விளையாட கருதினால், ஐபிஎல் அணி அவரை, மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்க வேண்டும். ஆனால், ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கினால், அவர் டி20 கிரிக்கெட் போட்டியில், தொடக்க வீரராக மட்டுமே களம் இறங்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை