ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதற்கு ஆகாஷ் சோப்ரா கடும் கண்டனம்!

Updated: Mon, Nov 03 2025 22:05 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி நவம்பர் 6 ஆம் தேதி கோல்ட் கோஸ்டில் நடைபெற இருக்கிறது.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை பெறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கபட்டது விமர்சனங்களுக்கு உள்ளனது. ஏனெனில் ஆசிய கோப்பை தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்ட நிலையிலும், அவர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா, “ஜிதேஷ் சர்மா விளையாடுகிறார், சஞ்சு சாம்சன் விளையாடவில்லை. இதன் அர்த்தம் என்ன? இதில் இனி நாம் லாஜிக்கைத் தேட வேண்டியதில்லை, ஏனென்றால் ஒருவேளை அணிக்கே கூட இது புரியாமல் இருக்கலாம். ஷுப்மான் கில் தொடக்க வீரராக களமிறங்கத் தொடங்கியபோது, ​​ஜிதேஷ் வரிசையில் கீழே ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தோம், ஆனால் அது நடக்கவில்லை" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆசியக் கோப்பையில், சாம்சன் முதலில் கீழ் வரிசையில் விளையாடினார். பின்னர் மேல் வரிசையில் விளையாடினார். இறுதிப் போட்டியில் அவர் முக்கியமான ரன்கள் எடுத்தார், ஆனால் இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஒரு இன்னிங்ஸுக்குப் பிறகு அவர் நீக்கப்பட்டார். சாம்சன் ரசிகர்கள் வருத்தப்படுவது சரிதான், ஆனால் இதன் பொருள் ஜிதேஷ் மட்டுமே விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

ஷுப்மான் கில்லின் ஃபார்ம் குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா "முதல் போட்டியில் கில் 37 ரன்கள் எடுத்தார், ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் 5 மற்றும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த கட்டத்தில் அவர் மீது ரன்கள் எடுக்க வேண்டிய அழுத்தம் அதிகரித்து வருகிறது, சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் தங்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்".

Also Read: LIVE Cricket Score

“அதற்காக சுப்மான் ஃபார்மில் இல்லை என்று நான் கூறமாட்டேன், ஆனால் அவருக்கு நிச்சயமாக ரன்கள் குறைவு. ஆசிய கோப்பை, ஒருநாள் தொடர், இப்போது டி20 என எல்லா இடங்களிலும் இதே கதைதான் நடந்து வருகிறது. அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனால் நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பிடிப்பாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை