உலகக்கோப்பை தொடரில் ராயூடுவை தேர்தெடுத்திருக்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பணியாற்றிய ரவிசாஸ்திரி அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பைத் தொடரோடு தனது பயிற்சியாளர் பொறுப்பினை ராஜினாமா செய்தார்.
அவரது தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பான பல வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் ஐசிசி தொடரை வெல்ல முடியவில்லை என்ற குறை மட்டுமே உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட அணியில் தனக்கு உடன்பாடு இல்லை என்று அவர் பிரத்யேகப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இங்கிலாந்தில் நடைபெற்ற அந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான அணியை தேர்வு செய்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. மேலும் அணியை தேர்வு செய்யும்போது என்னிடம் ஆலோசனையும் கேட்கவில்லை.
ஒரே அணியில் மூன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன் என்று புரியவில்லை. அதில் எனக்கு சற்றும் உடன்பாடு கிடையாது. ஏனெனில் அந்த அணியில் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், தோனி என மூவரையும் ஒரே அணியில் வைத்திருப்பது என்ன லாஜிக் என்பது எனக்கு புரியவில்லை.
என்னை பொறுத்தவரை அனைத்து தேர்வின்போது என்னிடம் கருத்துக் கேட்டாலோ அல்லது பொது விவாதம் நடந்தாலோ மட்டுமே நான் எனது கருத்தை தெரிவிப்பேன். மற்றபடி தேர்வு குழுவினரின் வேலைகளில் நான் தலையிடுவது கிடையாது.
அதன்படி தனியாக நடைபெற்ற அந்த அணி தேர்வில் நான் எதையும் சொல்லவில்லை. அவர்களாகவே அணி வீரர்களை தேர்வு செய்துவிட்டார்கள். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அம்பத்தி ராயுடு அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவரை நிச்சயம் சேர்த்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் துவக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் தோல்வி அடைந்து அந்த தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.