ரவி சாஸ்திரியின் சாதனையை சமன்செய்த ஜஸ்பிரித் பும்ரா!
Bumrah Equals Shastri Record: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இன்னிங்ஸின் போது 10ஆவது வரிசையில் களமிறங்கி 50+ பந்துகளை எதிர்கொண்ட இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியும் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானதுடன் ஸ்கோரையும் சமன்செய்தது.
இதனால் முன்னிலை ஏதுமின்றி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 192 ரன்களில் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி இறுதிவரை போராடிய நிலையிலும் 22 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
இப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க கடினமாக போராடியதில் ஜஸ்பிரித் பும்ராவின் பங்கு மிகப்பெரியதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்திய அணி ஒரு கட்டத்தில் 112 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த பும்ரா எதிரணி பந்துவீச்சாளர்களை அழுத்தத்தில் தள்ளினார். இப்போட்டியில் அவர் 54 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்களை எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
இந்நிலையில் இந்த இன்னிங்ஸின் மூலம் பும்ரா சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இன்னிங்ஸின் போது 10ஆவது வரிசையில் களமிறங்கி 50+ பந்துகளை எதிர்கொண்ட இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக கடந்த 1981 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் ரவி சாஸ்திரி 54 பந்துகளில் 19 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
Also Read: LIVE Cricket Score
ஆனால் தற்போது ஜஸ்பிரித் பும்ரா 54 பந்துகளை எதிர்கொண்ட ரவி சாஸ்திரியின் சாதனையை சமன்செய்துள்ளார். முன்னதாக இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் வெளிநாடுகளில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் கபில்தேவின் சாதனையையும் ஜஸ்பிரித் பும்ரா முறியடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.