சஹா மீது மரியாதை உண்டு - ராகுல் டிராவிட்!

Updated: Mon, Feb 21 2022 12:58 IST
Image Source: Google

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மூத்த வீரர்களான புஜாரா, ரஹானே, சஹா, இஷாந்த் சர்மா ஆகியோர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு ஒரு பேட்டியில் சஹா கூறுகையில், “உங்களிடம் எப்படி சொல்வது எனத் தெரியவில்லை. புதிய விக்கெட் கீப்பரைத் தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் முடிவெடுத்துள்ளார்கள் என்றார் பயிற்சியாளர் டிராவிட். என் வயதா அல்லது உடற்தகுதியா - எது இதற்குக் காரணம் எனக் கேட்டேன். 

இள வயது திறமைகளைத் தேர்வு செய்யவுள்ளார்கள். நீங்கள் 11 வீரர்களில் ஒருவராக இல்லாமல் இருப்பதால் வேறு வீரர்களை முயற்சி செய்கிறோம் என்றார். மேலும், நியூசிலாந்துக்கு எதிராக அரை சதம் எடுத்து அணியைக் காப்பாற்றியபோது பிசிசிஐ தலைவர் கங்குலி எனக்குத் குறுந்தகவல் அனுப்பினார். என்னுடைய ஆட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்த கங்குலி, அவர் பதவியில் இருக்கும் வரை எதைப் பற்றியும் நான் கவலைப்படக்கூடாது என்றார். அது என்னுடைய தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியது. ஆனால் வெகு சீக்கிரமாக எல்லாமே மாறியது ஏன் எனக்குப் புரியவில்லை” என்று தெரிவித்தார். சஹாவின் இந்தப் பேட்டி கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 3ஆவது டி20 ஆட்டத்துக்குப் பிறகு சஹா விவகாரம் பற்றி பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “தனிப்பட்ட உரையாடல்களை வெளியே கூறியதற்காக சஹா மீது எனக்கு வருத்தமில்லை. சஹா இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்புக்காக அவர் மீது அதிக மரியாதை உள்ளது. அவருடனான மரியாதை காரணமாகவே அந்த உரையாடல் நடைபெற்றது. தெளிவும் உண்மையும் அவருக்கு அளிக்கப்பட வேண்டும். ஊடகம் வழியாக அவர் இதைத் தெரிந்துகொள்ளக் கூடாது.

இதுபோன்ற உரையாடல்களை வீரர்களிடம் நான் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறேன். நான் அவர்களுக்குச் சொல்லும் விஷயங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் எண்ணுவதில்லை. இதனால் நான் மனம் வருந்துவதில்லை. இப்படித்தான் இது நடக்கும். 

அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகத் திரைமறைவில் செய்து உரையாடலே இல்லாமல் இருக்கக் கூடாது. இப்போதும் 11 பேர் கொண்ட அணியைத் தேர்வு செய்யும்போது நானோ ரோஹித் சர்மாவோ தேர்வு செய்யப்படாத வீரர்களிடம் நிலைமையை விளக்குவோம். என்னுடைய அணியினருக்கு தெளிவும் உண்மையும் வழங்கப்பட வேண்டும். அவர்கள் மீது நான் மரியாதை கொண்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை