இவர் தான் இந்திய அணியின் துருப்புச்சீட்டு - டேல் ஸ்டெயின்
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இன்னும் நான்கு நாட்களே மீதமுள்ள நிலையில், போட்டிக்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறி இருக்கும் நிலையில், அவர்களுக்கு பதில் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சூர்யகுமார் யாதவ், ப்ரித்வி ஷா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கப் போகும் வீரர்கள் யார் யார் என்பதில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், இந்திய அணி குறித்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் "நான் மற்றவர்கள் சிந்திப்பது போல் அல்லாமல், வேறு மாதிரி சிந்திப்பதாகவும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற ஒருவர் இந்தியாவுக்கு மிகப்பெரிய வீரராக இருக்கும் போது, நாம் வேகப்பந்து வீச்சுக்கு சற்று மிகையாகவே முக்கியத்துவம் கொடுக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும், ஸ்பின் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். அஷ்வின் டன் கணக்கில் ஓவர்களை வீசும் வல்லமைப் பெற்றவர். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள், வேகப்பந்துவீச்சுக்கு உகந்த நிலைமைகளில் விளையாடுவதில் மிகவும் சிறப்பான அணிகளாகும். ஆனால், ஸ்பின் விளையாடுவதில் முனைப்பு காட்டுவதில்லை.
எனவே, அஸ்வின் இந்தத் தொடரில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்லும் மிகப்பெரிய துருப்புச்சீட்டாக இருக்கலாம். அதேசமயம், இங்கிலாந்து அணியால் ரிஷப் பந்தை வெளியேற்றக்கூடிய ஒரு ஸ்பின்னரை அவர்களால் கண்டுபிடிக்க முடியுமா? எனவே இந்தத் தொடர் யார் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் என்பதை அறியும் போர்க்களமாக இருக்கலாம்" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.