பிக் பேஷ் தொடரில் இருந்து விலகிய அஸ்வின்; காரணம் என்ன?
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 14 அரைசதங்கள் என 3053 ரன்களையும், 537 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் அவர் தனது பெயரில் வைத்துள்ளார்.
மேற்கொண்டு 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சர்வதேச கிரிக்கேட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாலும், உள்ளூர் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடி வந்த நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.
இருப்பினும் அவர் தனது ஓய்வு முடிவின் போதே, வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட ஆர்வம் இருப்பதாக கூறினார். இதுபோன்ற சூழ்நிலையில் தான எதிர்வரும் பிக் பேஷ் லீக் டி20 தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட ரவிச்சந்திரன் அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இருப்பினும் அஸ்வின் எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார், எத்தனை ஆண்டுகளுக்கு விளையாடுவார் என்பது குறித்து எந்தவொரு தகவல்களும் வெளியாவில்லை.
இதனால் பிக் பேஷ் லீக் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன. இந்நிலையில், பிக் பேஷ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் விலகியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. காயம் காரணமாக அஸ்வின் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், எதிவரும் பிக் பேஷ் தொடரில் இருந்து விலகியாத அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: LIVE Cricket Score
இதுகுறித்து பேசிய அஸ்வின், “பிக் பேஷ் லீக் தொடரை தவறவிடுவது எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது. இப்போது என் கவனம் முழுவது குணமடைந்து வலுவாக மீண்டு வருவதில் தான் உள்ளது. சிட்னி தண்டர் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் அவர்கள் ஏற்கனவே எனக்குக் காட்டிய அன்பிற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். அஷ்வின் பிக் பேஷ் தொடரில் இருந்து விலகி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.