பிக் பேஷ் லீக் தொடரில் விளையாடும் அஸ்வின்; எந்த அணிக்கு தெரியுமா?

Updated: Thu, Sep 25 2025 20:02 IST
Image Source: Google

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 14 அரைசதங்கள் என 3053 ரன்களையும், 537 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் அவர் தனது பெயரில் வைத்துள்ளார். 

மேற்கொண்டு 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சர்வதேச கிரிக்கேட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாலும், உள்ளூர் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடி வந்தார்.

இதுபோன்ற சூழ்நிலையில் தான் கடந்த மாதம் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். இந்தாண்டு ஐபிஎல் சீசனில் அவர் பெரிதளவில் சோபிக்க தவறியதுடன், சில போட்டிகளில் பிளேயிங் லெவனில் இருந்தும் நீக்கப்பட்டிருந்தார். மேலும் எதிர்வரும் ஐபிஎல் தொடரிலும் அவர் வேறு அணிக்கு செல்லவுள்ளார் என்ற தகவல்களும் வெளியான நிலையில், அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். 

மேலும் அவர் தனது ஓய்வு முடிவின் போதே, வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட ஆர்வம் இருப்பதாக கூறினார். மேலும் அவர் பிபிஎல் மற்றும் ஐஎல் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், எதிர்வரும் பிக் பேஷ் லீக் டி20 தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட ரவிச்சந்திரன் அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை சிட்னி அணியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இருப்பினும் அஸ்வின் எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார், எத்தனை ஆண்டுகளுக்கு விளையாடுவார் என்பது குறித்து எந்தவொரு தகவல்களும் வெளியாவில்லை. மேலும் பிபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து பேசிய அஸ்வின், டேவிட் வார்னர் மற்றும் சிட்னி தண்டர் நேஷன்ஸ் அணிக்காக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

சிட்னி தண்டர் அணி: வெஸ் அகர், டாம் ஆண்ட்ரூஸ், ரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா), கேமரூன் பான்கிராஃப்ட், சாம் பில்லிங்ஸ் (இங்கிலாந்து), ஒல்லி டேவிஸ், லாக்கி பெர்குசன் (நியூசிலாந்து), மேத்யூ கில்க்ஸ், கிறிஸ் கிரீன், ரியான் ஹாட்லி, ஷதாப் கான் (பாகிஸ்தான்), சாம் கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஆண்ட்ரூ, பிளேக் நிகிதாராஸ், டேனியல் சாம்ஸ், தன்வீர் சங்கா, டேவிட் வார்னர்.

Also Read: LIVE Cricket Score

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை