அடுத்த சைமண்ட்ஸ் இவர் தான் - இளம் வீரரைப் பாராட்டும் ரிக்கி பாண்டிங்!

Updated: Sat, Sep 03 2022 12:05 IST
Image Source: Google

முன்னாள் கிரிக்கெட் வீரரான ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான டிம் டேவிட்டை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் துவங்குகிறது. அனைத்து அணிகளும் டி.20 உலகக்கோப்பைக்கான தங்களது அணிகளை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றன.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, முதல் ஆளாக டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தனது அணியை கெத்தாக அறிவித்தது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணிக்கு வென்று கொடுத்த அதே வீரர்களே இந்த தொடருக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர். மிட்செல் ஸ்வெப்சன் மட்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் அதிரடி ஆட்டக்காரரான டிம் டேவிட் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், டி.20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி குறித்து பேசிய முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங், இளம் வீரரான டிம் டேவிட்டை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

டிம் டேவிட் குறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில், “கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிக்பாஸ் லீக் போன்ற உள்ளூர் போட்டிகளிலேயே டிம் டேவிட் தனது வாய்ப்பிற்காக போராடி வந்தார், ஆனால் தற்போதைய சூழலில் இருக்கும் அபாயகரமான டி20 பேட்ஸ்மேன்களில் அவரும் ஒருவர். ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டத்தை அருகில் இருந்து கவனித்தேன், ஒற்றை ஆளாக போட்டியை மாற்றி கொடுக்கும் திறன் அவரிடம் உள்ளது. 

ஐபிஎல் தொடரில் அவர் சில போட்டிகளில் விளையாடிய விதம் ஆச்சரியத்தை கொடுத்தது. டிம் டேவிட் ஒவ்வொரு போட்டியிலும் தன்னை முன்னேற்றி கொண்டே உள்ளார். அவரை முன்னாள் வீரரான ஆண்ட்ரியூ சைமண்ட்ஸுடன் நான் ஒப்பிட்டு பார்க்கிறேன். டிம் டேவிட் போன்ற வீரர்கள் வெறும் ஓரிரு போட்டிகளில் மட்டும் சிறப்பாக விளையாடுபவர்கள் அல்ல, தொடரையே வென்று கொடுக்கும் திறன் படைத்தவர்கள், டி.20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் டிம் டேவிட்டின் பங்கு முக்கியமானதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணி: ஆரோன் பின்ச், ஆஷ்டன் ஆகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், ஜாஸ் ஹசில்வுட், ஜோஸ் இங்லீஸ், மிட்செல் மார்ஸ், கிளன் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, கேமிரான் க்ரீன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை