AUS vs SA, 3rd T20I: மேக்ஸ்வெல் அதிரடியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸி!
தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை செமன்செய்தன.
இந்நிலையில் ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று கெய்ர்ன்ஸில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் ஐடன் மார்க்ரம் ஒரு ரன்னிலும், ரியான் ரிக்கெல்டன் 13 ரன்னிலும், அதிரடியாக விளையாடிய் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் 24 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 49 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த டெவால்ட் பிரீவிஸ் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய டெவால்ட் பிரீவிஸ் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் பிரீவிஸி ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 25 ரன்களைச் சேர்த்த நிலையில் ஸ்டப்ஸும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ரஸ்ஸி வேண்டர் டுசென் 38 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
இதனால் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஹெட்19 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் க்ரீன் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
மேலும் அரைசதம் அடித்து அசத்திய கேப்டன் மிட்செல் மார்ஷும் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 54 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய ஆரோன் ஹார்டி, பென் துவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ் உள்ளிட்டோர் சோபிக்க தவறினர். இருப்பினும் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த கிளென் மேக்ஸ்வெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
Also Read: LIVE Cricket Score
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய கிளென் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதையும், டிம் டேவிட் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.