ஜிம்பாப்வேவிடமும் சிறப்பான பந்துவீச்சாளர்கள் உள்ளனர் - கேஎல் ராகுல்!

Updated: Sat, Aug 20 2022 21:14 IST
Image Source: Google

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜிம்பாப்வேவின் ஹரேரா மைதானத்தில் நடைபெற்றது. 

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி வீரர்கள், முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் ஜிம்பாப்வே அணி வெறும் 161 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

அதன்பின் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் கே.எல் ராகுல் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தலா 33 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 39 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலமும் 25.4 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்தநிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்த வெற்றி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய இந்திய அணியின் கேப்டனான கேஎல் ராகுல், ஜிம்பாப்வே அணியின் சில பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக பந்துவீசியதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய கேஎல் ராகுல், “ஜிம்பாப்வே அணியில் சில திறமையான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அதனை வங்கதேச தொடரிலேயே நான் கவனத்திருந்தேன். ஜிம்பாப்வே அணியின் சில பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு எதிராகவும் மிக சிறப்பாக பந்துவீசினர். நான் பொறுமையாக இருந்து விளையாட வேண்டும் என நினைத்திருந்தேன். 

ஆனால் அது இந்த போட்டியில் நடக்கவில்லை. மிடில் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் இங்கு சிறப்பான கிரிக்கெட் விளையாடி, வெற்றி பெறுவதற்காகவே வந்துள்ளோம். இந்த தொடரை கைப்பற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எஞ்சியுள்ள போடியிலும் வெற்றி பெறுவதற்காக போராடுவோம். 

இந்தியாவில் நடைபெறும் போட்டிகளை போன்றே வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளிலும் இந்திய அணிக்கு அதிக ஆதரவு கிடைக்கிறது. எங்கு சென்றாலும் அங்கு அதிகமான ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவாக வருகின்றனர், அவர்களின் ஆதரவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை