இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் நிதீஷ் குமார் ரெட்டியும், ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஓவனும் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர்.

Advertisement

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 14 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரிவுடன் 8 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மற்றொரு நட்சத்திர வீரர் விராட் கோலியும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். மேற்கொண்டு அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லும் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

Advertisement

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் கேஎல் ராகுல் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 38 ரன்களையும், அக்ஸர் படேல் 31 ரன்களையும் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக, இந்தியாவின் இன்னிங்ஸ் அத்துடன் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதுடன், ஆஸ்திரேலிய அணிக்கு 26 ஓவர்களில் 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஓவன், மேத்யூ குஹ்னெமன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 8 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மேத்யூ ஷார்ட்டும் 8 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் மார்ஷுடன் இணைந்த ஜோஷ் பிலீப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடி ஜோஷ் பிலிப் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 37 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

Also Read: LIVE Cricket Score

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிட்செல் மார்ஷ் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 46 ரன்களையும், மேத்யூ ரென்ஷா 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 21.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News