ஆஸ்திரேலிய யு19 அணியை ஒயிட்வாஷ் செய்து இந்திய யு19 அணி அசத்தல்!

Updated: Fri, Sep 26 2025 22:21 IST
Image Source: Google

இந்திய அண்டர்19 அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவு செய்ததுடன், தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலைலையில், அணியின் தொடக்க வீரர்கள் ஆயுஷ் மாத்ரே 4 ரன்னிலும், வைபவ் சூர்யவன்ஷி 16 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய விஹான் மல்ஹோத்ராவும் 40 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் இணைந்த வேதாந்த் திரிவேதி - ஹர்வன்ஷ் பங்கலியா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதங்களைக் கடந்தும் அசத்தினர். பின்னர் 84 ரன்னில் வேதாந்தும், 62 ரன்களில் ஹர்வன்ஷும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் பெரிதாளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். 

இதனால் இந்திய அண்டர் 19 அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 280 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் வில் பைரோம் மற்றும் கேசி பார்டன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அண்டர் 19 அணி வீரர்கள், இந்திய பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். அந்த அணியில் அதிகபட்சமாகவே டாம் ஹோகன் 28 ரன்களைச் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அண்டர்19 அணி 28.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அண்டர்19 அணி தரப்பில் கிலான் படேல் 4 விக்கெட்டுகளையும், உதவ் மோஹன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அண்டர் 19 அணி 167 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்ததுடன், ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை