ஐபிஎல் 2021: மீண்டும் அசத்திய தவான்; புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 29ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, மயாங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பந்த் முதலில் பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் பிரப்சிம்ரான் சிங், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா என நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சோற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இருப்பினும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய மயாங்க் அகர்வால் இறுதிவரை போராடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது மட்டுமல்லாமல், 99 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி இன்னிங்ஸ் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியில் பிரித்வி ஷா - ஷிகர் தவான் இணை அதிரடியான தொடக்கக்கத்தை கொடுத்தது. இதில் பிரித்வி ஷா 39 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த ஸ்டீவ் ஸ்மித் தனது பங்கிற்கு 24 ரன்களை சேர்த்தார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் அரைசதம் கடந்ததோடு அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இதனால் 17.4 ஓவர்களிலேயே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிகர் தவான் 69 ரன்களை சேர்த்தார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.