ரவீந்திர ஜடேஜா - வாஷிங்டன் சுந்தரை பாராட்டிய ஷிகர் தவான்!

Updated: Mon, Jul 28 2025 20:00 IST
Image Source: Google

Manchester Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஆல் ரவுண்டர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து அற்புதமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியதாக முன்னாள் வீரர் ஷிகர் தவான் பராட்டியுள்ளார்.

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.     

இதில் இந்திய அணி வீரர்கள் கேப்டன் ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சதமடித்தும், கேஎல் ராகுல் 90 ரன்களையும் சேர்த்தன் மூலம் கடைசி நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 425 ரன்களைச் சேர்த்தது. இப்போட்டியின் கடைசி நாள் இறுதிவரையிலும் முடிவு எட்டப்படாததன் காரணமாக இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. 

அதிலும் குறிப்பாக இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 185 பந்துகளில் 13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 107 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 206 பந்துகளில் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 101 ரன்களையும் சேர்த்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திணறவைத்தனர். இதன் மூலம் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவருக்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. 

இந்நிலையில் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பார்ட்னர்ஷிப்பை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் பாராட்டியுள்ளார். இதுகுறித்து ஷிகர் தவான் தனது எக்ஸ் பதிவில், “வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து அற்புதமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். அதேபோல் கேப்டன் ஷுப்மன் கில்லும் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்தில் இந்த அணி சிறப்பாக செயல்படுவதைப் பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது ஷிகர் தவானின் எக்ஸ் பதிவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31ஆம் தேதி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், இரு அணி வீரர்களும் திவீரமாக தயாராகி வருகின்றனர். 

இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிரௌலி, லியாம் டௌசன், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஒல்லி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்க், கிறிஸ் வோக்ஸ்.

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ், நாராயண் ஜெகதீசன்.

Also Read: LIVE Cricket Score

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை