ஐபிஎல் 2022: அதிவேக அரைசதமடித்த கம்மின்ஸ்; மும்பையை துவம்சம் செய்தது கேகேஆர்!

Updated: Wed, Apr 06 2022 23:12 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின்  இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் 
விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

மும்பைக்கு கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் மோசமான தொடக்கத்தைத் தந்தனர். ரோஹித் 12 பந்துகளுக்கு 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பிரேவிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆட்டத்தில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாசிய அவர் 19 பந்துகளில் 29 ரன்களுக்கு வருண் சக்ரவர்த்தி சுழலில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிஷனும் 21 பந்துகளில் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 11 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 55 ரன்கள் மட்டுமே மும்பை திணறியது.

இதன்பிறகு, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். திலக் வர்மா கொடுத்த கேட்ச் வாய்ப்பை அஜின்க்யா ரஹானே தவறவிட, அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டார்.

தொடக்கத்தில் நிதானம் காட்ட, பின்னர் படிப்படியாக இருவரும் அதிரடிக்கு மாறினர். மும்பை அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளுக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பிறகு, சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறக்க அணியின் ரன் ரேட் ஓவருக்கு 7-ஐ தாண்டத் தொடங்கியது. ஆண்ட்ரே ரஸல் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சூர்யகுமார் யாதவ் 34ஆவது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

ஆனால், கம்மின்ஸ் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த கைரன் பொலார்ட் கடைசி 5 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உள்பட 22 ரன்கள் விளாச மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 27 பந்துகளில் 38 ரன்களும், பொலார்ட் 5 பந்துகளில் 22 ரன்களும் எடுத்தனர். 

இதையடுத்து களமிறங்கிய ரஹானே 7 ரன்னிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 10 ரன்னிலும் விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் - சாம் பில்லிங்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின் 17 ரன்களில் பில்லிங்ஸ் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நிதீஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் சொற்ப ரன்களுடன் பெவிலியனுக்கு திரும்பினர். 

இருப்பினும் மறுமுனையில் பொறுமையாக விளையாடி வந்த வெங்கடேஷ் ஐயர் ஐபிஎல் தொடரில் தனது 5ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

இதையடுத்து களமிறங்கிய பாட் கம்மின்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி, பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பறக்கவிட்டு பிரமிக்கவைத்தார். இதன் மூலம் 14 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதமெடுத்த கேஎல் ராகுலின் சாதனையையும் சமன் செய்தார்.

இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களுடனும், பாட் கம்மின்ஸ் 56 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை