நியூசிலாந்து தொடருக்கான ஆஸி அணி அறிவிப்பு; முக்கிய வீரர்கள் விலகல்!
Australia T20 Squad: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்கஸ் ஸ்டொய்னிஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அந்த அணி இத்தொடரை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. முன்னதாக, ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
எதிவரும் இந்திய அணி தொடர், ஆஷஸ் தொடர் மற்றும் 2027அம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில், தனது உடற்தகுதியைக் கருத்தில் கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரரான ஸ்டார்கின் ஓய்வு அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதுதவிர முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் பாட் கம்மின்ஸும் நியூசிலாந்து தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஷஸ் தொடருக்கு தயாராகும் அவகையில், அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்தும் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நியூசிலாந்து தொடருக்கான அணியை அறிவித்தது.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட் ஆகியோரும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். மேற்கொண்டு நட்சத்திர வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோரும் இடம்பிடித்திருக்கும் நிலையில், கேமரூன் க்ரீனுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
Also Read: LIVE Cricket Score
ஆஸ்திரேலிய டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், சீன் அபோட், பென் டுவார்ஷுயிஸ், சேவியர் பார்ட்லெட், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட், மேட் குஹ்னெமன்