ஆல்-டைம் ஒருநாள் அணியை தேர்வு செய்த பாட் கம்மின்ஸ்; ரோஹித்-கோலிக்கு இடமில்லை!
ஆஸ்திரேலிய அணி இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒருநாள் அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் அணியில் சாதாரண வீரர்களாக மட்டுமே இடம் பிடித்துள்ளனர். அதேசமயம் அறிமுக வீரர்கள் நிதீஷ் ரெட்டி, துருவ் ஜூரெல் ஆகியோருக்கும் ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்டோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், மிட்செல் மார்ஷ் அணியின் கேப்டனாக தொடர்கின்றார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நடந்த உரையாடலின் போது, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆல் டைம் ஒருநாள் பிளேயிங் லெவன் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
கம்மின்ஸ் தேர்வு செய்த இந்த அணியில், தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் டேவிட் வார்னரைத் தேர்வு செய்வதுள்ளார். அவர்களைத் தொடர்ந்து மூன்றாம் இடத்தில் ரிக்கி பாண்டிங்கையும், நான்காம் இடத்தில் ஸ்டிவ் ஸ்மித்தையும் தேர்ந்தெடுத்துள்ளார். மேற்கொண்டு அவர் தனது அணியின் மிடில் ஆர்டரில் ஷேன் வாட்சன் மற்றும் மைக்கேல் பேவன் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளார்.
இருப்பினும் அவர் தனது அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதுதவிர, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ள அவர், ஷேன் வார்னேவை சுழற்பந்து வீச்சாளராகவும், பிரட் லீ, கிளென் மெக்ராத் மற்றும் இந்திய வீரர் ஜாகீர் கான் ஆகியோரை வேகப்பந்து வீச்சாளர்களாகவும் அவர் தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
பாட் கம்மின்ஸ் தேர்வு செய்த ஆல் டைம் ஒருநாள் லெவன் (ஆஸ்திரேலியா-இந்தியா): டேவிட் வார்னர், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் ஸ்மித், ஷேன் வாட்சன், மைக்கேல் பெவன், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஷேன் வார்னே, பிரட் லீ, ஜாகீர் கான், க்ளென் மெக்ராத்.