பாட் கம்மின்ஸின் சாதனையை முறியடித்த ஆகாஷ் தீப்
Akash Deep Record: எட்ஜ்பாஸ்டனில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இன்னிங்ஸில் பந்து வீசும்போது ஒரு வெளிநாட்டு வீரராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஆகாஷ் தீப் படைத்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் 180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 427 ரன்களை குவித்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து, இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 271 ரன்களை மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சில சாதனைகளையும் படைத்துள்ளார். இப்போட்டியில் இந்திய அணிக்காக ஆகாஷ் தீப் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்படி முதல் இன்னிங்ஸில் 20 ஓவர்கள் பந்து வீசிய அவர் 88 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 21.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதில் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், எட்ஜ்பாஸ்டனில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இன்னிங்ஸில் பந்து வீசும்போது ஒரு வெளிநாட்டு வீரராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஆகாஷ் தீப் படைத்துள்ளார். இது மட்டுமல்லாமல், பர்மிங்ஹாம் டெஸ்டில் நான்காவது இன்னிங்ஸில் ஒரு வெளிநாட்டு வீரராக சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.
Also Read: LIVE Cricket Score
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் நான்காவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அவரது சாதனையை முறியடித்துள்ளார். இதன் காரணமாக இனி வரும் டெஸ்ட் போட்டிகளிலும் ஆகாஷ் தீப் பிளேயிங் லெவனில் தனது இடத்தை தக்கவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.