ஐபிஎல் 2022 குவாலிஃபயர் 2: ஜோஸ் பட்லரின் சதத்தினால் ஆர்சிபியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ராஜஸ்தான்!

Updated: Fri, May 27 2022 23:03 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனின் இறுதிப்போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறிவிட்ட நிலையில், 2ஆவது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் தகுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் டாஸ் தோற்ற சஞ்சு சாம்சன், முக்கியமான இந்த நாக் அவுட் போட்டியில் டாஸ் வென்றார்.

இரு அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் செம கெத்தாக களமிறங்கியுள்ளன.

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் கோலி 7 ரன்னில் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார். கேப்டன் டுப்ளெசிஸும் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 13 பந்தில் 24 ரன்கள் அடித்தார். எலிமினேட்டரில் கோலி, டுப்ளெசிஸ், மேக்ஸ்வெல் ஆகிய நட்சத்திர வீரர்கள் சொதப்பியபோது, அபாரமாக ஆடி சதமடித்த ரஜத் பட்டிதார், இந்த போட்டியிலும் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் 58 ரன்கள் அடித்த பட்டிதாரை அஸ்வின் வீழ்த்தினார்.

லோம்ரார், தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற,பெரிய ஸ்கோரை நோக்கிச்சென்ற ஆர்சிபியை 157 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.  பிரசித் கிருஷ்ணா மற்றும் ஒபெட் மெக்காய் ஆகிய இருவரும் அபாரமாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளத்தை அமைத்தனர். 

இதில் 21 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால், விராட் கோலியின் அபாரமான கேட்ச்சின் மூலம் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திருபினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இதுஒருபுறம் இருக்க மறுமுனையில் அதிரடியில் மிரட்டி வந்த ஜோஸ் பட்லர் அரைசதம் கடந்தார். பின்னர் 23 ரன்களைச் சேர்த்திருந்த கேப்டன் சஞ்சு சாம்சன் ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் தவறான ஷாட்டை அடித்து கேட்ச் கொடுத்தார்.

அதுவரை ராக்கெட் வேகத்தில் சென்றுகொண்டிருந்த ராஜஸ்தான் அணியின் ஸ்கோர், படிபடியாக குறைந்தது. பின்னர் பட்லருடன் இணைந்து தேவ்தத் படிக்கல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார்.

அதன்பின் 9 ரன்களில் தேவ்தத் படிக்கல், ஜோஷ் ஹசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் அதிரடி ஆட்டத்திற்கு மீண்டும் திரும்பிய ஜோஸ் பட்லர் 59 பந்துகளில் சதமடித்து விளாசினார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லரின் 4ஆவது சதமாகவும் இது அமைந்தது. 

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை