டி20 கிரிக்கெட்டில் 13ஆயிரம் ரன்கள்; சாதனை பட்டியலில் இணைந்த ஜோஸ் பட்லர்!
இங்கிலாந்தின் உள்ளூர் டி20 தொடர்களில் ஒன்றான டி20 பிளாஸ்ட் தொடரின் நடப்பாண்டு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற நார்த் குரூப் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் யார்க்ஷயர் மற்றும் லங்காஷயர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லீட்ஸில் உள்ள ஹெடிங்க்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லங்காஷயர் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 77 ரன்களையும், பில் சால்ட் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 42 ரன்களையும் சேர்த்தனர். யார்க்ஷயர் தரப்பில் தாம்சன், சோஹான், மில்னஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய யார்க்ஷயர் அணியில் அப்துல்லா ஷஃபிக் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 54 ரன்களையும், வில் சதர்லேண்ட் 28 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறினர். இதனால் அந்த அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லங்காஷயர் தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் கிறிஸ் கிரீன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்மூலம் லங்காஷயர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் யார்க்ஷயர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் 77 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் ஜோஸ் பட்லர் 77 ரன்களைச் சேர்த்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது 13ஆயிரம் ரன்களையும் பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 13 ரன்களைக் கடந்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன் இங்கிலாந்து அணி தரப்பில் அலெக்ஸ் ஹேல்ஸ் (13,814) மட்டுமே டி20 கிரிக்கெட்டில் இந்த சாதனையைப் படைத்திருந்தார். இதுதவிர்த்து உலகளவில் டி20 கிரிக்கெட்டில் 13அயிரம் ரன்களைக் கடந்த 7ஆவது வீரர் எனும் பெருமையையும் ஜோஸ் பட்லர் பெற்றுள்ளார். இதற்கு முன் கிறிஸ் கெயில், கீரன் பொல்லார்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், சோயப் மாலிக், விராட் கோலி மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்
- 14562 - கிறிஸ் கெய்ல்
- 13854 - கீரான் பொல்லார்ட்
- 13814 - அலெக்ஸ் ஹேல்ஸ்
- 13571 - ஷோயப் மாலிக்
- 13543 - விராட் கோலி
- 13395 - டேவிட் வார்னர்
- 13033* - ஜோஸ் பட்லர்
Also Read: LIVE Cricket Score
இது தவிர்த்து, டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஜோஸ் பட்லர் தற்போது கூட்டாக மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். அவர் இதுநாள் வரை டி20 கிரிக்கெட்டில் 93 அரைசதங்களை அடித்து பாபர் ஆசாமின் சாதனையை சமன்செய்துள்ளார். இந்த பட்டியலில் டேவிட் வார்னர் 111 அரைசதங்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 105 அரைசதங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.