தொடர் நாயகன் விருதை வென்றது குறித்து அர்ஷ்தீப் சிங்!

Updated: Mon, Aug 08 2022 15:13 IST
It Is All About Adapting – Arshdeep Singh After Being Declared Player Of The Series (Image Source: Google)

இந்திய அணியைச் சேர்ந்த 23 வயதான இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் மூலமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றார். அதன்படி இன்னும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இந்திய அணிக்காக அறிமுகமாகவில்லை என்றாலும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சமீபத்தில் அறிமுகமாகி தற்போது நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தனது சிறப்பான பவுலிங்கை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்றுடன் நடைபெற்ற முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரின் 5 போட்டிகளிலும் விளையாடி சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி 7 விக்கெட்டை வீழ்த்தியதோடு ஓவருக்கு 7 ரன்களுக்கும் குறைவாக அவர் எக்கானமியை மெயின்டைன் செய்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இடதுகை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதாலும், குறைந்த அளவே ரன்களை விட்டுக் கொடுப்பதனாலும் இவரை டி20 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வரும் வேளையில் அவரது தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு அனைவரது மத்தியிலும் நல்ல பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்று முடிந்த ஐந்தாவது டி20 போட்டிக்கு பின்னர் தொடர் நாயகன் விருதினை பெற்ற அவர் தனது சிறப்பான செயல்பாட்டிற்கு என்ன காரணம் என்பது குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் பேசிய அவர், “இந்த தொடரில் நான் விளையாடிய விதம் உண்மையில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அணியின் பயிற்சியாளர் டிராவிட் சார் என்னிடம் எப்போதும் கூறுவது ஒன்றை மட்டும் தான். நாம் செயல்பாட்டினை அடிப்படையாகக் கொண்ட ஒரு அணி. எனவே எப்போதும் வெற்றி தோல்வி குறித்தும் ரிசல்ட் குறித்து யோசிக்காமல் நமது செயல்பாட்டினை மட்டுமே முன்னுறுத்தி விளையாட வேண்டும் என்று கூறுவார்.

அவரது அந்த வார்த்தைகள் என்னை மிகச் சிறப்பாக பந்துவீச வைத்தது என்று நினைக்கிறேன். அதோடு ஒரு பந்துவீச்சாளராக அணியின் நிர்வாகத்திடம் இருந்து நல்ல ஆதரவு கிடைக்க வேண்டும். நான் மட்டுமின்றி அனைத்து இளம்வீரர்களுக்குமே அணி நிர்வாகத்திடம் இருந்து ஆதரவு கிடைக்கவேண்டும். அந்த வகையில் தற்போதுள்ள இந்திய அணியில் அனைத்து இளம்வீரர்களுக்குமே நல்ல ஆதரவு அணி நிர்வாகத்திடம் இருந்து கிடைக்கிறது.

அந்த வகையில் எனக்கு அணியில் என்ன ரோலில் விளையாட வேண்டும் என்பது குறித்த தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டதோடு அவர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே தன்னால் என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை