AUS vs IND, 3rd T20I: ஆஸியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ஆஸ்திரேலியா-இந்திய அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்றைய தினம் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஹாபர்ட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 6 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 11 ரன்னிலும், ஜோஷ் இங்கிலிஸ் ஒரு ரன்னிலும், மிட்செல் ஓவன் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த டிம் டேவிட் - மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவு செய்து அசத்தினர்.
பின்னர் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 74 ரன்களைச் சேர்த்த நிலையில் டிம் டேவிட் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 64 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேத்யூ ஷார்ட் 26 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கும் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 25 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து ஷுப்மன் கில் 15 ரன்களிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 24 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் களமிறங்கிய அக்ஸர் படேல் தனது பங்கிற்கு 17 ரன்களையும், திலக் வர்மா 29 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அவருடன் இணைந்த ஜித்தேஷ் சர்மாவும் சிறப்பாக செயல்பட அணியின் ஸ்கோரும் உடர்ந்ததுடன், இப்போட்டியில் இந்திய அணியின் வெற்றியும் உறுதியானது.
Also Read: LIVE Cricket Score
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வாஷிங்டன் சுந்தர் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 49 ரன்களையும், ஜித்தேஷ் சர்மா 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் இந்திய அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான பந்துவிச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.