எல்பிஎல் 2021: மீண்டும் கோப்பையை தூக்கியது ஜாஃப்னா!
லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் - கலே கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஜாஃப்னா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் களமிறங்கிய அனைவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து அசத்தினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ 63 ரன்களையும், கொஹ்லர் 57 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இமாலய இலக்கை துரத்திய கலே அணிக்கு குசால் மெண்டிஸ் - தனுஷ்கா குணத்திலக இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கியது. இதனால் 19 பந்துகளிலேயே கலே அணி 50 ரன்களை கடந்தது.
பின் 39 ரன்களில் குசால் மெண்டிஸ் விக்கெட்டை இழக்க, மறுமுனையிலிருந்த குணத்திலக அரைசதம் அடித்த கையோடு நடையைக் கட்டினர். அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் களத்திலிருந்து திரும்பினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் கலே அணி 9 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் கலே கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
முந்தாக கடந்தாண்டு நடைபெற்ற தொடக்க சீசன் எல்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஜாஃப்னா ஸ்டாலின்ஸ் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் கலே கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.