SL vs NZ, 1st ODI: நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி அசத்தல் வெற்றி!
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தியுள்ளன.
இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது இன்று தொடங்கிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தாம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நியூசிலாந்தை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பதும் நிஷங்கா 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் அவிஷ்கா ஃபெர்னாண்டோவுடன் இணைந்த குசால் மெண்டிஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், பவுண்டரிகளையும் விளாசித்தள்ளினர். இப்போட்டியில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் இருவரும் தங்களது 4அவது சர்வதேச ஒருநாள் சத்ததைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரும் இணைந்து 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
அதன்பின் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 100 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சதீரா சமரவிக்ரமாவும் 5 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த குசால் மெண்டிஸ் - சரித் அசலங்கா இணையும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென் உயர்த்தினர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் மெண்டிஸ் 17 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 143 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து இறுதிவரை களத்தில் இருந்த சரித் அசலங்கா 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் இலங்கை அணி 49.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 324 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக இலங்கை அணியின் இன்னிங்ஸும் அத்துடன் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்து அணி தரப்பி ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டுகளையும், மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து டக்வொர்து லூயிஸ் முறைப்படி நியூசிலாந்து அணி 27 ஓவர்களில் 221 ரன்கள் என்ற இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு வில் யங் மற்றும் டிம் ராபின்சன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் இருவரும் இணைந்து பொறுப்புடன் விளையாடியதுடன், முதல் விக்கெட்டிற்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதனால் நியூசிலாந்து அணி இந்த இலக்கை எளிதாக எட்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் வகையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிம் ராபின்சன் 35 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் யங்கும் 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மஹீஷ் தீக்ஷ்னா பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரி நிக்கோலஸ் 6 ரன்களுக்கும், மார்க் சாப்மேன் 2 ரன்களுக்கும், கிளென் பிலீப்ஸ் 9 ரன்களுக்கும், மிட்செல் ஹெய் 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்ப, நியூசிலாந்து அணியும் 134 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த மைக்கேல் பிரேஸ்வெல் - மிட்செல் சான்ட்னர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். ஆனால் இதில் மிட்செல் சான்ட்னர் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் எதிர்பாரா விதமாக ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மைக்கேல் பிரேஸ்வெல் 34 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் தில்ஷன் மதுஷங்கா 3 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket