ஐஎல்டி20 2025: அவிஷ்கா சாதனை அரைசதம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேப்பிட்டல்ஸ் அணிக்கு பென் டங்க் மற்றும் ஷாய் ஹோப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷாய் ஹோப் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் விளையாடிய பென் டங்க் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பிராண்டன் மெக்முல்லன் 22 ரன்களிலும், கேப்டன் சிக்கந்தர் ரசா 27 ரன்களிலும், ரோவ்மன் பாவெல் 28 ரன்னிலும் என அடுத்தடுத்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் அந்த அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதேசமயம் தொடக்க வீரராக களமிறங்கிய ஷாய் ஹோப் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 83 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்தது. ஷார்ஜா தரப்பில் கேப்டன் டிம் சௌதீ 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வாரியர்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரும் முதல் விக்கெட்டிற்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 37 ரன்களைச் சேர்த்திருந்த ஜான்சன் சார்லஸ் ஆட்டமிழந்தார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான ஜேசன் ராய் 26 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 16 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் ஐஎல்டி20 கிரிக்கெட் தொடரில் அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர் எனும் சாதனையையும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ படைத்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ 27 பந்துகளில் 6 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 81 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ரோஹன் முஸ்தஃபா 17 ரன்களுக்கும், கரிம் ஜனத் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேக் வெல்ஸ் 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 18.1 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.