இது இந்தியாவிற்கு தகுதியான வெற்றி - ஷோயப் அக்தர்!

Updated: Tue, Sep 12 2023 14:49 IST
Image Source: Google

இந்திய அணி நடப்பு ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகப் பெற்ற வெற்றி, இந்திய அணி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்து இருக்கிறது. இந்த வெற்றி இந்திய நிர்வாகத்திற்கு அளித்த நம்பிக்கையைத் தாண்டி, இந்திய அணி குறித்த பலரது பார்வையையும் மாற்றியிருக்கிறது. உண்மையில் இந்த ஒரு வெற்றி 10 வெற்றிக்கு சமமான தாக்கத்தை, விளைவுகளை இந்திய கிரிக்கெட் மீது ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணி பேட்டிங் துறை மட்டும் அல்லாமல் பந்துவீச்சு துறையும் மிகவும் கேள்விக்கு உட்பட்ட ஒன்றாகவே பலரது பார்வையில் இருந்து வந்தது. இந்தியாவை விட ஒரு சிறிய வாய்ப்பு வெற்றிக்கு பாகிஸ்தானுக்கு அதிகம் என்று பலரும் பேசினர். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் வரை பாகிஸ்தான் அணிக்கே வெற்றி வாய்ப்பு கொஞ்சம் அதிகம் என்று கூறியிருந்தார். 

காரணம் பாகிஸ்தான் சில மாதங்களாக இலங்கையில் விளையாடி வருவதும், தொடர்ச்சியாக அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் செயல்பாடும் விதத்தினாலும், அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு, ஒரு மிகப்பெரிய திறமையின் வெடிப்பு போல இருந்தது. இந்திய அணி ஒட்டுமொத்தமாக எழுச்சி பெற்று, பாகிஸ்தான் அணியை எந்த இடத்திலும் எழவிடாமல் முடக்கி விட்டார்கள். உலகக்கோப்பை முன் இருப்பதால் இந்த வெற்றி மிக முக்கிய ஒன்றாக இந்திய அணிக்கு பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர், “குல்தீப் இதற்கு முன் ஏன் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்? என்று எனக்குப் புரியவில்லை. அவர்தான் தற்போது மிகச் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் என்று காட்டினார். இப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதி போட்டியில் சந்தித்துக் கொண்டால், அது மிகச்சிறந்த போட்டி சண்டையாக இருக்கும்.

இது இந்தியாவிற்கு தகுதியான வெற்றி. அவர்கள் மிக நன்றாக விளையாடினார்கள். நான் மிகவும் விரும்பியது இந்திய பந்துவீச்சாளர்கள் வெளிப்படுத்திய விதத்தைதான். அவர்கள் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை முடிக்க நினைத்தார்கள். இது மிகவும் ஊக்கம் அளிக்கும் ஒரு விஷயமாகும். நான் ஒரு வேகப்பந்துவீச்சாளராக இதை உணர்கிறேன்” என்று கூறியுள்ளார். 

நடப்பு ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மோதிக்கொண்ட முதல் போட்டிக்கு பிறகு அக்தர் பாபர் அசாம் கேப்டன்சி குறித்து விமர்சனம் செய்திருந்தார். அதில், “பாபர் தற்காப்பு கேப்டன்சி செய்கிறார், இந்திய அணியின் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தி, ஆல் அவுட் செய்ய அவர் நினைக்கவில்லை. தேவையில்லாமல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை ஐம்பது ஓவர் வீச வைக்கிறார்” என்று கூறியிருந்தார். தற்பொழுது பாகிஸ்தான் அணி செய்யாத விஷயத்தை இந்திய அணி செய்திருப்பதை குறிப்பிட்டு மறைமுகமாக பாபர் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை