இந்திய டி20 அணியில் இருந்து குல்தீப் யாதவ் விடுவிப்பு - பிசிசிஐ!
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயாகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் எஞ்சிய போட்டிக்கான இந்திய அணியில் இருந்து குல்தீப் யாதவ் விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் அதிகராப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய அணி நிர்வாகம், குல்தீப் யாதவை தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரில் இருந்து விடுவிக்கக் கோரியுள்ளது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ தொடரில் அவர் பங்கேற்பார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், குல்தீப் யாதவிற்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது” என்று கூறியுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி இந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் தான் இத்தொடருக்கு தயாராகும் வகையில் குல்தீப் யாதவ், தற்சமயம் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,
Also Read: LIVE Cricket Score
இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில், திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, அக்ஸர் படேல், ஜிதேஷ் சர்மா, வருண் சகரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.