ஆல் ரவுண்டராக கலக்கிய ஜார்ஜ் லிண்டே; பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அசத்தல்!
தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரீஸா ஹென்றிக்ஸ் மற்றும் குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டி காக் 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஹென்றிக்ஸூடன் இணைந்த டோனி டி ஸோர்ஸியும் சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றிக்ஸ் தனது அரைசதத்தைப் பதிவு செய்த நிலையில், மறுமுனையில் டோனி டி ஸோர்ஸி 33 ரன்னிலும், டெவால்ட் பிரீவிஸ் 9 ரன்னிலும், மேத்யூ பிரீட்ஸ்கி ஒரு ரன்னிலும், கேப்டன் பெரீரா 10 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து 60 ரன்களைச் சேர்த்த கையோடு ரீஸா ஹென்றிஸுக்ம் விக்கெட்டை இழக்க, இறுதியில் ஜார்ஜ் லிண்டே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினீஷிங்கைக் கொடுத்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளையும், சைம் அயுப் 2 விக்கெட்டுகளையும், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அஹ்மத் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சைம் ஆயூப் - ஷாகிப்சாதா ஃபர்ஹான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபர்ஹான் 24 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பாபர் ஆசாம் ரன்கள் ஏதுமின்றியும், சல்மான் அலி அகா 2 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்தனர். ஆவர்களைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சைம் அயூப்பும் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 37 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ஹசன் நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், உஸ்மான் கான் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
Also Read: LIVE Cricket Score
மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் முகமது நவாஸ் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து நடையைக் கட்டினர். இதனால் பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஷ் 4 விக்கெட்டுகளையும், ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.