SL vs AUS, 1st ODI: மேக்ஸ்வெல் அதிரடியில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடக்கிறது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. பகலிரவு போட்டியாக நடக்கும் இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது.
முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குணதிலகா - நிசாங்கா இணைந்து சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 115 ரன்களை குவித்து கொடுத்தனர். குணதிலகா 55 ரன்னிலும், நிசாங்கா 56 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
3ஆம் வரிசையில் இறங்கிய குசால் மெண்டிஸ் ஒருமுனையில் நிலைத்து நின்று நங்கூரம் போட்டு பொறுப்புடன் ஆட, தனஞ்செயா டி சில்வா 7 ரன்னில் ஆட்டமிழந்தாலும், 4ஆவது விக்கெட்டுக்கு மெண்டிஸுடன் ஜோடி சேர்ந்த அசலங்கா சிறப்பாக ஆடி 37 ரன்கள் அடித்தார். தசுன் ஷனாகா(6) மற்றும் சாமிகா கருணரத்னே(7) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
இதற்கிடையே அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார் குசால் மெண்டிஸ். பின்வரிசையில் இறங்கிய வனிந்து ஹசரங்கா 19 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்களை விளாசி சிறப்பாக முடித்து கொடுத்தார். குசால் மெண்டிஸ் 86 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். 50 ஓவரில் 300 ரன்களை குவித்த இலங்கை அணி, 301 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து இலக்கை துரத்தி விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி 12.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
அதன்பின் ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்திலேயே ஆரோன் ஃபிஞ்ச் 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அடுத்து களமிறங்கிய மார்கஸ் லபுசாக்னே ஸ்மிதுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 53 ரன்களில் ஸ்மித் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து லபுசாக்னேவும் 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதனைத் தொடர்ந்து அதிரடியாக விளௌயாடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 44 ரன்களிலும், அலெக்ஸ் கேரி 21 ரன்களிலும் விக்கெட்டை இழந்தார். இதனால் வெற்றி இலங்கையின் வசம் சென்றுகொன்டிருந்தது.
இப்போட்டியில் வழக்கத்திற்கு மாறாக 7ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி மிரட்டினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி மேக்ஸ்வெல் அரைசதம் கடந்ததுடன், அணிக்கு வெற்றியையும் தேடித்தந்தார்.
இதன்மூலம் 42.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி, 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் மேக்ஸ்வெல் 6 பவுண்டரி, 6 சிக்சர்களை விளாசி 80 ரன்களைச் சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.