இந்திய அணியால் நாக் அவுட் போட்டிகளில் அழுத்தத்தை சமாளிக்க முடிவதில்லை - முகமது ஹபீஸ்!

Updated: Thu, Aug 31 2023 14:57 IST
Image Source: Google

ஐசிசி நடத்தும் 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் தொடங்கி நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகளுக்கு சவாலை கொடுத்த சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

முன்னதாக கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்தியா அதன் பின் பெரும்பாலான ஐசிசி தொடர்களில் லீக் சுற்றில் அசத்தினாலும் நாக் அவுட் சுற்றில் ஏதோ ஒரு வகையில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறி வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. இத்தனைக்கும் சாதாரண இருதரப்பு தொடர்களில் உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரை மிரட்டும் இந்திய அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் சர்வதேச தரத்திற்கு நிகரான ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்தை பெற்றிருந்தும் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அசத்த முடியவில்லை என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிராகவும் ஏமாற்றமாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இருதரப்பு தொடர்களில் புலியாக செயல்படும் இந்திய அணியினர் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் மட்டும் பூனையைப் போல் தடுமாற்றமாக செயல்படுவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்தியா நல்ல அணி ஆனால் இன்னும் அவர்களுடைய சிறந்த செயல்பாடுகள் வெளிவரவில்லை. குறிப்பாக சமீப காலங்களில் ஐசிசி தொடர்களில் அழுத்தமான நாக் அவுட் போட்டிகளிலும் இதர முக்கிய தொடர்களிலும் அவர்களால் அழுத்தத்தை சிறப்பாக கையாள முடியவில்லை.

அதே சமயம் இருதரப்பு தொடர்களில் அசத்தும் இந்தியா நாக் அவுட் போட்டிகளில் ஒரு அணியாக சேர்ந்து அழுத்தத்தை கையாள்வதற்கான வழியை கண்டறிய வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே நல்ல அணியான அவர்கள் இன்னும் முழுமையான அணியாக மாறவில்லை. மேலும் தற்போது கம்பேக் கொடுக்கும் பும்ரா இந்த தொடரில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பதை பார்க்க வேண்டும். ஏனெனில் அவர் லேசான ஃபிட்னஸ் பிரச்சினைகளை கொண்டுள்ளார். இருப்பினும் ஒருவேளை அவர் அபாரமாக செயல்படும் பட்சத்தில் இந்தியா அனைத்தையும் தன் பக்கம் திருப்பலாம். 

ஆனாலும் சமீப காலங்களில் ஐசிசி தொடர்களில் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை என்ற பின்னடைவை சரி செய்வதற்கான வேலையை செய்ய வேண்டும். அத்துடன் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் வெல்வதற்கு திறமைகளை தாண்டி உங்களுடைய மனதளவிலான பலம் தான் முக்கியமாகும். ஏனெனில் தற்போது சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதுவே உங்களுக்கு எக்ஸ்ட்ரா அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது உங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கவனத்துடன் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்..

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை