ஆசிய கோப்பை 2025: இந்தியாவுக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்!

Updated: Sun, Sep 21 2025 22:03 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா ஆகியோர் நீக்கப்பட்டு ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு சாகிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஃபகர் ஸமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த சாஹிப்சாதா ஃபர்ஹான் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்த சைம் அயுப்பும் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய இருவரது பார்ட்னர்ஷிப்பும் 70 ரன்களைக் கடந்தது. அதன்பின் 21 ரன்கள் எடுத்த நிலையில் சைம் அயுப்பும், 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 58 ரன்களுக்கு ஃபர்ஹானும் விக்கெட்டை இழந்தனர். 

மேற்கொண்டு களமிறங்கிய ஹுசைன் தாலத்தும் 10 ரன்களில் நடையைக் கட்ட, பாகிஸ்தான்  அணியும் தடுமாற தொடங்கியது. பின்னர் இணைந்த கேப்டன் சல்மான் அலி ஆகா - முகமது நவாஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் முகமது நவாஸ் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஃபஹீம் அஷரஃபும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சல்மான் ஆகா 17 ரன்களையும், ஃபஹீம் அஷ்ரஃப் 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். 

Also Read: LIVE Cricket Score

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஷிவம் தூபே 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை