ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அபார வெற்றி!
IND vs PAK, Asia Cup Match: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா இணை சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து, இந்திய அணி பந்துவீச அழைத்தார். மேலும் இன்றைய போட்டிக்கான இரு அணியின் பிளேயிங் லெவனிலும் எந்தவொரு மாற்றமும் செய்யபடவில்லை.
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர் சைம் அயுப் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய் முகமது ஹாரிஸும் ரன்களுக்கு நடையைக் கட்ட, பின்னர் இணைந்த பர்ஹான் - ஃபகர் ஸமான் இணை அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபகர் ஸமான் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் சல்மான் ஆகா, ஹசன் நவாஸ், முகமது நவாஸ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
மறுபக்கம் தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த சாகிப்சாதா ஃபர்கான் அரைசதத்தைப் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். இதனால் பாகிஸ்தான் அணி 83 ரன்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய ஷாஹீன் அஃப்ரிடி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். அவருக்கு துணையாக சுஃபியான் முகீமும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய நிலையில் பாகிஸ்தானின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது.
இதில் சுஃபியான் முகீம் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த ஷாஹீன் அஃப்ரிடி 4 சிக்ஸர்களை விளாசியதுடன் 33 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா, அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அதேசமயம் மறுபக்கம் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் 10 ரன்களுடன் நடையைக் கட்ட, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அபிஷேக் சர்மாவும் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 31 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுதியதுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
Also Read: LIVE Cricket Score
இதில் திலக் வர்மா 31 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் 47 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.இதன் மூலம் இந்திய அணி 15.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது, இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தங்களின் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் உறுதி செய்தது. இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.