ஐபிஎல் 2022: கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி; சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக ஜடேஜா!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் நாளை மறுநாள் மஹாராஷ்டிராவில் கோலமாக தொடங்கவுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்பதனால், 74 போட்டிகளைக் கொண்ட பிரம்மாண்ட கிரிக்கெட் தொடராக நடைபெறவுள்ளது.
மேலும் இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதப்படி நாளை மறுநாள் தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா செயல்படுவார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் சிஎஸ்கே அணியை வழிநடத்தும் மூன்றாவது வீரர் எனும் பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றுள்ளார். இதுகுறித்து சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க தோனி முடிவு செய்து, ரவீந்திர ஜடேஜாவை அணியை வழிநடத்த தேர்வு செய்துள்ளார். 2012 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒருங்கிணைந்த அங்கமாக இருந்து வரும் ஜடேஜா, இதன்மூலம் சிஎஸ்கேயை வழிநடத்தும் மூன்றாவது வீரராக இருப்பார். இந்த சீசனிலும் அதற்கு அப்பாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தொடர்ந்து விளையாடுவார்” என்று தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட 2008ஆம் ஆண்டு முதலே சீஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த மகேந்திர சிங் தோனி, 4 முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளார். மேலும் கடந்த 2020ஆம் ஆண்டைத் தவிர தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனைத்து ஐபிஎல் தொடரிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
தற்போது 40 வயதை எட்டியுள்ள தோனி, இன்னும் ஓரிரு ஐபிஎல் தொடர்களில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளதால் இதுவே அவரது கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.