ஐபிஎல் 2022: சச்சினின் லெவன் அணியில் ரோஹித், கோலிக்கு இடமில்லை!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நேற்று முந்தினம் நிறவுப் பெற்றது. இத்தொடரின் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி கோப்பையை வென்று சாதித்தது.
இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் மற்றும் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் அடிப்படையில் தனது கனவு அணியை உருவாக்கியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்த ஐபிஎல் லெவனில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி ஆகியோருக்கு இடமில்லை. இருவரது ஆட்டமும் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக இருந்ததால் அவர்களை தேர்வு செய்யவில்லை.
அதிலும் விராட்கோலி 341 ரன் எடுத்து இருந்தார். சராசரி 22.73 ஆகும். ரோகித் சர்மாவின் சராசரி 19.14 ஆக இருந்தது. அவர் 14 ஆட்டத்தில் மொத்தம் 268 ரன்களே எடுத்தார்.
ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் டைடன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவையே டெண்டுல்கர் தனது அணிக்கும் நியமித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து ஜோஸ் பட்லர், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாகவும், 3ஆவது வரிசைக்கு லோகேஷ் ராகுலையும் அவர் தேர்வு செய்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டு வீரர்களுக்கு இவரது அணியில் இடமில்லை.
டெண்டுல்கர் தேர்வு செய்த ஐபிஎல் லெவன்:
ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து), ஷிகர்தவான், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர் (தென்ஆப்பிரிக்கா), லிவிங்ஸ்டோன் (இங்கிலாந்து), தினேஷ் கார்த்திக், ரஷீத்கான், முகமது ஷமி, பும்ரா, யசுவேந்திர சாஹல்.
குஜராத் அணியில் 4 பேரும், ராஜஸ்தான், பஞ்சாப் அணியில் தலா 2 பேரும், லக்னோ, பெங்களூர், மும்பை அணிகளில் தலா ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணியில் இருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.