NZ vs ENG, 2nd Test Day 1: நியூசிலாந்து பந்துவீச்சில் தடுமாறும் இங்கிலாந்து!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.
அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் - டொமினிக் சிப்லி இணை களமிறங்கி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் சிபிலி 35 ரன்களில் ஆட்டமிழங்க, அடுத்து வந்த ஜாக் கிரௌலி, கேப்டன் ரூட், ஒல்லி போப் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்திய ரோரி பர்ன்ஸ் அரைசதம் கடந்தார். அவருடன் இணைந்த டேனியல் லாரன்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தார்.
பின்னர் 81 ரன்கள் எடுத்திருந்த ரோரி பர்ன்ஸ் ஆட்டமிழக்க, ஜேம்ஸ் பிரேசி, ஒல்லி ஸ்டோன் ஆகியோர் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். இதற்கிடையில் டேனியல் லாரன்ஸ் தனது அரைசதத்தைக் கடந்தார்.
இதன் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களைச் சேர்த்துள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில் ட்ரெண்ட் போல்ட், மேட் ஹென்றி, ஆஜஸ் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து டேனியல் லாரன்ஸ் 67 ரன்களுடனும், மார்க் வுட் 16 ரன்களுடனும் நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடரவுள்ளனர்.