இங்கிலாந்து ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து!

Updated: Wed, Oct 29 2025 20:53 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸை வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது.

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கும் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் நட்சத்திர வீரர்கள் பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தல், சாம் கரண் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் 42 ரன்களையும், கேப்டன் ஹாரி ப்ரூக் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். 

இதனால் இங்கிலாந்து அணி 36 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 175 ரன்களில் ஆல் அவுட்டானது. நியூசீலாந்து சார்பில் பிளைர் டிக்னர் 4 விக்கெட்களை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியும் முதல் ஓவரிலேயே வில் யங்கின் விக்கெட்டை இழந்து தடுமாறியது. மேற்கொண்டு கேன் வில்லியம்சன்னும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் இணைந்த ரச்சின் ரவீந்திரா - டேரில் மிட்செல் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் அரைசதம் கடந்து அசத்தி இருந்த ரச்சின் ரவீந்திரா 54 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டாம் லாதம், மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோரும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இருப்பினும் டேரில் மிட்செல் அரைசதம் கடந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 

Also Read: LIVE Cricket Score

மேலும் இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காம் இருந்த டேரில் மிட்செல் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 56 ரன்களையும், கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 34 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 33.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை