இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றும் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோ ரூட், கேப்டன் ஹாரி ப்ரூக், ஜேக்கப் பெத்தெல், சாம் கரண் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மேற்கொண்டு நிதானமாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் 38 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜேமி ஓவர்ட் - பிரைடன் கார்ஸ் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேமி ஓவர்டன் தனது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.

Advertisement

பின்னர் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 36 ரன்களைச் சேர்த்த நிலையில் பிரைடன் கார்ஸ் ஆட்டமிழக்க, ஜேமி ஓவர்டன் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 68 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு களமிறங்கிய ஜோஃப்ரா ஆர்ச்சரும் 16 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்களை சேர்த்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் பிளைர் டிக்னர் 4 விக்கெட்டுகளையும், ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டெவான் கான்வே 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 34 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து 46 ரன்களைச் சேர்த்திருந்த ரச்சின் ரவீந்திராவும் ஆட்டமிழக்க, வில் யங் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய டேரில் மிட்செல் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். 

Also Read: LIVE Cricket Score

அதேசமயம் அரைசதத்தை நெருங்கிய டேரில் மிட்செலும் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்களில் மிட்செல் சாண்ட்னர் 2 பவுண்டரி,2 சிக்ஸர்களுடன் 27 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இருப்பினும் நியூசிலாந்து அணி 44.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. 

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News