ஐபிஎல் 2022: தன்மீதான சர்ச்சைகள் குறித்து பேசிய அஸ்வின்!
இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் அவ்வபோது களத்தில் புதுவிதமாக செயல்பட்டு சர்ச்சையில் சிக்குவது வழக்கம். ஐபிஎலில் ஜாஸ் பட்லரை மான்கட்டிங் செய்து வெளியேற்றி பெரிய அளவில் கவனம் பெற்றார். இதனைத் தொடர்ந்து மான்கட்டிங் முறையை ஐசிசி அதிகாரப்பூர்வமானதாக மாற்றியுள்ளது.
அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது, நடுவரை மறைத்துக்கொண்டு பந்துவீசியதாக களத்திலேயே நடுவர் எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து தான் விதிமுறைப்படிதான் செயல்படுகிறேன் என அஸ்வின் கூறியதும், நடுவர் எதுவும் பேசவில்லை.
இப்படி ரூல்ஸ் படி ஸ்ட்ரிட்டாக செயல்படும் அஸ்வின், 15ஆவது சீசனிலும் புதுவிதமாக செயல்பட்டார். டெத் ஓவர்களில் பேட்டிங் செய்த அவர், டயர்ட் ஆனதும் உடனே ரிட்டயர்ட் ஹர்ட் முறைப்படி வெளியேறி, புத்துணர்ச்சியுடன் அதிரடி பேட்ஸ்மேன்கள் களமிறங்க வழிவகை செய்தார். இப்படி அஸ்வின் தொடர்ந்து புதுவிதமாக செய்து வருவதால், இவர் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துகொண்டுதான் இருக்கிறது.
அஸ்வினுக்கு ஆரோக்கியமான கிரிக்கெட்டை விளையாடத் தெரியவில்லை. கிரிக்கெட் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி செயல்படுகிறார். இவர் நேர்மையான கிரிக்கெட் விரர் கிடையாது என பலரும் பலவிதமாக கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இருப்பினும், அஸ்வின் தொடர்ந்து புதுவிதமான விஷயங்களை முயற்சித்து வருகிறார்.
இந்நிலையில், தான் ஏன் இப்படி புதுவிதமாக முயற்சித்து வருகிறேன் என்பது குறித்து அஸ்வின் முதல்முறையாக விளக்கமாக பேசியிருக்கிறார்.
அதில், “சில வருடங்களுக்கு முன்பு (2013), இந்திய அணிக்கு டங்கன் பிளட்சர் தலைமை பயிற்சியாளராக இருந்தார். அப்போது அவரிடம் சென்று, ‘எப்படி முன்னேறுவது, எப்படி சிறப்பாக மாறுவது’ என அடிக்கடி கேள்வி எழுப்பினேன். அதற்கு, ‘தவறு செய்து ரசிகர்களுக்கு முன்பாக தோல்வியடைந்தால் மட்டுமே உங்களால் சிறப்பாக மாற முடியும்’ எனக் கூறினார். இப்படிதான் எனது வாழ்நாள் முழுக்க செய்து வருகிறேன்” எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், “அந்த வகையில் விதிமுறைகளுக்கு அப்பால் செயல்பட விரும்பிய நான் நிறைய விமர்சனங்களை சந்தித்தேன். சில நேரங்களில் இவர் ஏன் இதையெல்லாம் செய்கிறார்? இவர் ஓவர் லட்சியம் கொண்டவரா? தேவையில்லாத அதிகப் பிரசிங்கித் தனமாக செயல்படுகிறாரா? என நிறைய பேர் பேசுகின்றனர். ஆனால், அதை மட்டும் நான் செய்தேன். அது போன்ற செயல்களை என்னிடம் இருந்து எடுத்துக்கொண்டால், இப்படிப்பட்ட நபர் உங்களுக்கு கிடைத்திருக்க மாட்டார். இனியும் தொடர்ந்து புதிய பிரச்சினைகளுடன் வருவேன்” எனத் தெரிவித்தார்.