PAK vs WI, 1st T20I: முகமது வாசிம், சதாப் கான் பந்துவீச்சில் சரிந்தது விண்டிஸ்!
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி முகமது ரிஸ்வான், ஹைதர் அலி இணை அதிரடியாக விளையாடி ரன் வேட்டை நடத்தியது. இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ரிஸ்வான் 78 ரன்களையும், ஹைதர் அலி 68 ரன்களையும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரொமாரியா செஃப்பர்ட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங், கேப்டன் பூரன், டேவன் தாமஸ், ப்ரூக்ஸ் என நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷாய் ஹோப்பும் 31 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். இதனால் 19 ஓவர்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டுகளையும், சதாப் கான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன் மூலம் பாகிஸ்தன் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.