ஆஸி கேப்டனாக இவரை நியமிக்கலாம் - ஆடம் கில்கிறிஸ்ட் நம்பிக்கை!
இங்கிலாந்து அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இருநாட்டு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2017 பிரிஸ்பேன் டெஸ்ட்டின்போது பெண் பணியாளர் ஒருவரை பாலியலுக்கு அழைத்து, டிம் பெய்ன் ஆபாச மெசேஜ்கள், அவரது நிர்வாணப்புகைப்படம் ஆகியவற்றை அனுப்பியது அம்பலமானதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருப்பதற்கான தகுதியை இழந்துவிட்டதாக கூறி ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் டிம் பெய்ன்.
இதையடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்க வேண்டியுள்ளது. துணை கேப்டன் பாட் கம்மின்ஸ், ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரில் ஒருவர் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தெரிகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸை நியமிக்க வேண்டுமென அந்த அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
Also Read: T20 World Cup 2021
இதுகுறித்து பேசிய கில்கிறிஸ்ட், “பாட் கம்மின்ஸ் தான் கேப்டன்சிக்கான போட்டியில் முன்னிலை வகிக்கிறார். அவருக்கு முன்னுரிமை கொடுத்து அவரை நியமிப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. வேகப்பந்து வீச்சாளர் என்பதற்காக அவர் வேண்டாம் என நினைக்க எந்த காரணமும் இல்லை. அணியில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் அவர் மீது நிறைய மரியாதை இருக்கிறது. எனவே கம்மின்ஸையே கேப்டனாக நியமிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.