சஞ்சு சாம்சன் இறுதிவரை போட்டியை கொண்டு சென்று எங்களை சற்று யோசிக்க வைத்து விட்டார் - டெம்பா பவுமா!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களின் முடிவில் 249 ரன்கள் குவித்தது.
பின்னர் 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 40 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் மட்டுமே குவித்ததால் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி சார்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்த போட்டியில் மொத்தம் 65 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 74 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதே போன்று இந்திய அணி சார்பாக 63 பந்துகளை சந்தித்த சஞ்சு சாம்சன் 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 86 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா, “இந்த போட்டி கடைசி வரை ஒரு நல்ல சவாலான போட்டியாக இருந்தது. சஞ்சு சாம்சன் இறுதிவரை போட்டியை கொண்டு சென்று எங்களை சற்று யோசிக்க வைத்து விட்டார். இருந்தாலும் எங்களது அணியின் வீரர்கள் உறுதியாக நின்று வெற்றியை பெற்று தந்துள்ளனர்.
இந்த மைதானத்தில் அதிக அளவு புற்கள் இல்லாததால் பந்து நன்றாக ஸ்விங் ஆனது இந்த போட்டியின் மிடில் ஓவர்களில் நாங்கள் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் வந்த மில்லர் மற்றும் கிளாஸன் ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களது பார்ட்னர்ஷிப் எங்களுக்கு நல்ல ரன் குவிப்பை வழங்கியது.
அதேபோன்று பந்து வீச்சிலும் ரபாடா மற்றும் பார்னல் ஆகியோர் முதல் 15 ஓவர்கள் அற்புதமாக வீசினார்கள். பின்னர் மிடில் ஓவர்களில் ரன்கள் கசிந்தாலும் இறுதியில் நாங்கள் நினைத்த ரிசல்ட் வந்தது மிகவும் மகிழ்ச்சி. இந்த வெற்றியை அப்படியே தொடர விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.