இந்திய அணிக்காக நான் எதையும் செய்வேன் - சஞ்சு சாம்சன்
ஆஸ்திரேலிய அணி இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒருநாள் அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் அணியில் சாதாரண வீரர்களாக மட்டுமே இடம் பிடித்துள்ளனர். அதேசமயம் அறிமுக வீரர்கள் நிதீஷ் ரெட்டி, துருவ் ஜூரெல் ஆகியோருக்கும் ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்திய ஒருநாள் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் சஞ்சு சாம்சன், இந்திய அணிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று கூறியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மும்பையில் ந்டைபெற்ற சியட் கிரிக்கெட் விருதுகள் நிகழ்ச்சியில் சஞ்சு சாம்சன் ஆண்டின் சிறந்த டி20 பேட்டர் விருதை வென்றார்.
அப்போது பேசிய அவர், "நான் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து, டிரஸ்ஸிங் ரூமில் ஒரு பகுதியாக இருக்க கடுமையாக உழைத்துள்ளேன். பேட்டிங் ஆர்டர் அல்லது பந்துவீச்சு என எந்தப் பாத்திரம் கொடுக்கப்பட்டாலும், அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இந்த விருதை எப்போதும் எனக்கு ஆதரவாக நின்ற என் மனைவிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாகவும், என் வேலையில் கவனம் செலுத்தியதற்காகவும் என்னைப் பாராட்டிக் கொள்ள விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.
Also Read: LIVE Cricket Score
கடந்த 12 மாதங்களாக சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவர் 12 இன்னிங்ஸ்களில் 183.70 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 37.90 சராசரியுடன் மூன்று சதங்களையும் அடித்துள்ளதுடன், 417 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இரண்டு முறை ஆட்ட நாயகன் விருதையும் வென்றுள்ளார். இருப்பினும் ஆசிய கோப்பை தொடரில் அவர் 5ஆம் இடத்தில் களமிறக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.