பெங்களூரு எனக்கு சொந்த மைதானம் - தினேஷ் கார்த்திக்!

Updated: Sat, Jun 18 2022 11:01 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 4ஆவது டி20 ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-2 என சமன் செய்துள்ளது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் முக்கியப் பங்காற்றிய தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதை வென்றார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி விளையாடிய முதல் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருந்தார். அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் ஓய்வு பெறாமல் விளையாடி வரும் ஒரேயொரு வீரர் தினேஷ் கார்த்திக்தான். 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி 16 வருடங்களுக்குப் பிறகு தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார் தினேஷ் கார்த்திக்.

ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய அவர், "மிகவும் நன்றாக உணர்கிறேன். இந்த அமைப்பில் நான் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். கடந்த ஆட்டத்தில் எங்களது திட்டங்களுக்கு ஏற்ப செயல்கள் அமையவில்லை. ஆனால், நான் இன்று என்னை வெளிப்படுத்தினேன். நான் சற்று நன்றாக யோசிக்கிறேன். சூழல்களை இன்னும் நன்றாக கணிக்க முடிகிறது. அது பயிற்சியின் மூலம் வரும். எனது பயிற்சியாளருக்கு நன்றி.

தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினர். பேட்டிங் செய்வதற்கு இது கடினமான ஆடுகளம். பவுண்டரிகள் அடிப்பது கடினமாக இருந்தது. நான் களமிறங்கியபோது நேரம் எடுத்துக்கொள்ளுமாறு ஹார்திக் பாண்டியா கூறினார். நீண்ட நாள்களாக விளையாடி வரும் வீரர்கள் இதுபோன்ற ஆடுகளங்களில் செயல்பட வேண்டியது முக்கியமானது.

பெங்களூரு எனக்கு சொந்த மைதானம். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்காக விளையாடியது இல்லை. ஆனால், அங்கு நிறைய விளையாடியுள்ளேன். இருஅணிகளுக்கிடையிலான தொடர் கடைசி ஆட்டம் வரை வந்திருப்பது நன்றாக உள்ளது" என்றார் கார்த்திக்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை